Thursday 7 July 2016

கல்வியாளர்கள் சங்கமம் – 2016
காரைக்குடி


ஆசிரியர்களால். . .  மாணவர்களுக்காக


என் வகுப்பறை. . . . .






 


கி.லோகநாதன், எம்.ஏ.,எம்.ஏ.,பி.எட்.,எம்.ஃபில்.,
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றி நடுநிலைப் பள்ளி
சென்னசமுத்திரம் / 632 506
திமிரி ஒன்றியம் (வே.மா.)

செல்பேசி : 9150312721 / 9789594178
E-Mail : logakrish69@gmail.com, teacherloga.blogspot.in



என் வகுப்பறை

       கல்வி சிறந்த தமிழ்நாட்டில் வரலாற்று புகழ்மிக்க வேலூர் மாவட்டத்தில் திமிரி ஒன்றியம், சென்னசமுத்திரம் நடுநிலைப்பள்ளி வரலாறு பட்டதாரி ஆசிரியராக கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய ஒட்டு மொத்த பணிக்காலம் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் ஒவ்வொரு நாளும் வகுப்பறை என்பது செயல்படும் வகுப்பறையாக மாற்ற என்னால் ஆன சிறுசிறு முயற்சிகள் மேற்கொள்வதுண்டு.
       வரலாறு கடந்த கால நிகழ்வுகளை அவற்றுடன் தொடர்புடைய மனிதர், இடம், காலம் இவற்றுடன் தொகுத்தளிக்கிறது. எனவே, மனிதர், இடம், காலம் ஆகிய மூன்று கூறுகளும் வரலாற்றுக்கு மிகவும் முக்கியம். ஒரு நிகழ்வில் மூன்று கூறுகளும் ஒன்று இல்லை எனினும் அது வரலாறாகாது. எந்த வரலாற்றுக்கருத்தும்
Ø  நிகழ்வு என்ன?
Ø  நிகழ்த்தியவர் / நிகழ்வில் பங்குகொண்டவர் யார்? (மனிதர்)
Ø  எங்கு நிகழ்ந்தது? (இடம்)
Ø  எப்பொழுது நிகழ்ந்தது? (காலம்)
என்ற நான்கு வினாக்களுக்கும் விடைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை.
அப்படி வரலாற்று நிகழ்ந்து இடம் நபர் பற்றிய பாடம் 8 ஆம் வகுப்பில் ஐரோப்பியர்கள் வருகைக்குப்பிறகு ஆங்கிலேய பிரெஞ்சு ஆதிக்கப்போட்டியில் “இரண்டாம் கர்நாடகப் போர்“ என வரலாறு சொல்கின்ற பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த கர்நாடக நவாப் சந்தா சாஹிப்பை ஆங்கிலேய, இராபர்ட் கிளைவ் ஆற்காட்டை முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். முகம்மது அலியை ஆற்காட்டின் நவாப் ஆக்கினார். எனவே ராபர்ட் கிளைவ் “ஆற்கட்டு வீரர்“ என பெருமையோடு அழைக்கப்பட்டார், என பாடப்பொருள் இயம்பும்.
இப்பேர்பெற்ற ஆற்காட்டில் ஒரு பெரிய கேட் ஒன்று நிறுவி நாளைக்கு டெல்லிக்கு செல்வதற்கான வாயில் இதுதான் என்று பொருள்பட டெல்லிகேட் ஒன்றை கட்டமைத்தார். இவ்விடத்தை காண செல்லலாம் என 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூறினேன். அவர்களும் எப்போது செல்வோம் என்று மிகவும் ஆவலாக இருந்தனர். அந்நேரத்தில் சில வட்டார அளவில் (SSA) சில பயிற்சிகள் நடைபெற்றன போதுமான ஆசிரியர்கள் பள்ளியில் இல்லாத காரணத்தினால் ஒரு வாரம் தள்ளிபோனது.
மாணவர்கள் மிகுந்த ஆவலுடன் பயிலும் மாணவரின் பெற்றோர் ஒருவர் லோடு லாரி (207) வைத்திருக்கிறார். சார் நாம் அதில் போகலாம். என்னுடைய பெயரை அவரிடம் சொல்லி “சார் லாரி கேட்கிறார் ஆற்காட்டு  வரை செல்ல வேண்டும்“ என கூறுகின்றனர். (எங்கள் பள்ளியிலிருந்து ஆற்காடு 28 கி.மீ) அவரும் ஒப்புக்கொள்கிறார். எரிபொருள் தேவைக்கு மட்டும் (டீசல்) காசு கொடுத்தால் போதும் என்கிறார்.  பிறகு ஏதாவது கொடுங்கள் நாளை வருகிறேன் என சொல்லிவிட்டுச் சென்றார். பின் மறுநாள் லாரியில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (33 மாணவர்கள்) அழைத்துக்கொண்டு தலைமை ஆசிரியருடன் சென்றோம். வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பார்த்ததில் மாணவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. மாணவர்கள் கி.பி.1752க்கு சென்றுவிட்டனர். சார் இங்கேதான் சந்தாசாஹிப் இருந்தானா? பிரெஞ்சுக்காரர்கள் எத்தனை பேர் இருந்தனர்? ஆங்கிலேயப் படைகள் எத்தனை பேர் இருந்தனர்? நவாப் என்றால் என்ன? அக்காலத்தில் “ஆற்காடு தலைநகராக விளங்கியதா? என அவரவர்க்கு தோன்றி கேள்விகள் மாணவர்களிடம் வந்தது? பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டனவா? இவ்விடம் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரிக்கப்படுகிறது என்ற தகவல்களையும் பெற்றனர்.
இப்படி களப்பயணமாக சென்ற நேரத்தில் AEEO எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார். அப்பொழுது அவர்கள் ஆசியர்களிடம்  அனுமதி இல்லாமல் களப்பயணம் செல்லக் கூடாது? என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன? என பல கேள்விகள் கேட்டுவிட்டு சென்றார். அன்று பிற்பகல் நாங்கள் பள்ளிக்கு வந்துவிட்டோம். அவர்கள் கேட்ட சில கேள்விகள் நியாயமானவைதான் என்றாலும் எங்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.
தம் பாடத்தில் வரும் நிகழ்வுகளின் வரலாற்று இடத்தை மாணவர்கள் பார்த்தார்கள் என்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதா?  இல்லை கல்வி அலுவலர் இதுபோன்ற செயல்கள் வருங்காலங்களில் செய்யக்கூடாது. மாணவர்களை அழைத்துச் செல்வது என்பது என்னுடைய அனுமதியின்றி நடக்கக்கூடாது என்ற வேதனையை வெளிப்படுத்துவதா? என்று தெரியவில்லை, இருப்பினும் தலைமையாசிரியரின் ஒத்துழைப்பு முழு அளவில் இருந்தபடியால் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறி முடிந்தன. அதுவல்லாமல் மாணவர்களின் தீவிர முயற்சியும் அவர்களாகவே திட்டமிட்டு செய்த பயணம் என்பதால் கூடுதலாகவே தாம் இணைத்துக்கொள்ள ஏதுவாக அமைந்தது.
“ஒரு நிகழ்விலிருந்து நூறு படிப்பினைகளைக் கற்றுக்கொள்கிறவன் அறிவாளி, ஆனால் நூறு நிகழ்வுகளிலிருந்து ஒரு படிப்பினையையும் கற்காதவன் அறிவிலி“ என்பார் அறிஞர்.
அதுபோல வரலாறு என்பது நிகழ்வுகள் நிறைந்தது. ஒவ்வொரு நிகழ்வும் படிப்பவரின் சூழலுக்கேற்ப நிறைய படிப்பினைகளைக் கற்றுத்தரவல்லது. வரலாற்று வகுப்பறையும் அதற்கும் ஒரு படிமேலே நிற்கிறது. வெறும் வார்த்தைகளின் தொகுப்பாக வரலாறு பார்க்கப்படுகிறதே தவிர வாழ்விற்குதவும் படிப்பினைகள் நிறைந்த பெட்டகமாக கருதப்படுவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இதுபோன்று வகுப்பறை அனுபவ நிகழ்வுகள் மேலும் மேலும் கற்றலை நிலைப்படுத்த அதன் வழியாக வரலாற்றுக் கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ள இயலும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
      
‘ நன்றி ‘








                                


























                              


              





                                        













                                     














                                       

Sunday 10 April 2016

தெருக்கூத்து வரலாறு (தொண்டை மண்டலம்)




பதிவரின் பெயர்
:
கி.லோகநாதன் M.A.M.A.B.Ed.,M.Phil. Phd.
தலைப்பு
:
தெருக்கூத்து – வரலாறு
(தொண்டை மண்டலம்)

முகவரி
:
இனியகம்
23,மாருதிபுரம்
திமிரி – 632 512.
வேலூர் மாவட்டம்.


வலைப்பதிவு

teacherloga.blogspot.in
மின்னஞ்சல்
:
அலைபேசி எண்
:
9789594178
9150312721





















           
தெருகூத்து வரலாறு (தொண்டை மண்டலம்)

       தமிழகத்தின் மிகப்பழமையான அரங்கக்கலை வடிவம் தெருக்கூத்து ஆகும். தெருக்களையே ஆடுகளமாகக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் தெருக்கூத்து எனப் பெயர் பெற்றது. ஒரு கதையைப் பாடியும் ஆடியும் உரையாடியும் நடித்து நிகழ்த்தப்படும் கலையாக இது விளங்குகிறது.
       தெருக்கூத்து 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பரவலாக இடம் பெறலாயிற்று. ஆரியமயமாக்கல் காரணமாக தமிழகத்தின் சிறு தெய்வங்கள் பல ஆரியத் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டன. தென்னிந்தியாவில் தெருக்கூத்து (தமிழ்நாடு) கதகளி (கேரளம்) யகஷகானம் (கன்னடம்) தெய்வம் (கேரளம்) பூதம் (கன்னடம்) முடியேற்று (கேரளம்) முதலிய வடிவங்கள் உள்ளன. ஒரு புராதன வடிவத்திலிருந்தே பின்னர் இவை பிரதேச ரீதியாக பிரிந்திருக்க வேண்டும் என்ற ஓர் கருத்துமுண்டு. இவற்றிடையே ஒப்பனை, உடை, மேடை செயற்பாடு, உள்ளடக்கம், அமைப்பு சடங்குத்தன்மை என்பனவற்றில் பெரும் ஒற்றுமை காணப்படுகிறது.

தொண்டை மண்டலத்தில் தெருக்கூத்து
       தொண்டை மண்டலம் என்பது பழைய வடாற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு (இன்றைய வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது) இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மத்தியில் திரௌபதி அம்மன் வழிபாடு பிரபலமானது. இப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில்களில் 29 அல்லது 21 அல்லது 20 நாள்கள்  (பொருளாதார வசதிக்கேற்ப நாள்கள் எண்ணிக்கை கூடும் குறையும்) சடங்கு நடைபெறும். இச்சடங்கில் தெருக்கூத்து இடம் பெறுகின்றது. இக்கூத்து கோயில் முன்றலில் மேடையிடப்பட்டு கூத்தாக நடைபெறும். அதே நேரம் கூத்துப் பாத்திரங்கள் திரௌபதி அம்மன் கோயில் கிரியைகளுடன் இணைகின்றன.
       திரௌபதி அம்மன் வழிபாடு தெருக்கூத்துக்கு உயிர்தந்த வழிபாடாகும். தொண்டை மண்டலத்தில் திரௌபதி எப்போது அம்மன் ஆனால்? என்பது தெரியவில்லை. எனினும் பல்லவர் காலத்தில் (7-ஆம் நூற்றாண்டு) காஞ்சிபுரம் காமாட்சியும், மதுரை மீனாட்சியும் சமணர்கட்கு எதிராக எழுந்த இந்து இயக்கத்தில் இந்து தெய்வங்களுடன் இணைக்கப்பட்டன. பின்னாளில் காவல்பெண் தெய்வம் திரௌபதி அம்மனாகி இருக்கலாம்.
       தாய் தெய்வங்களுக்குரிய கோயில்களில் கரகம், கணியன் ஆட்டம் என்பன நடந்துள்ளன. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆடல் வடிவத்தில் ஒரு நாடக வடிவம் இருந்து வந்துள்ளது. நாயக்கர் ஆட்சியில் யஷகானம், கர்நாடக பூத ஆட்டம், பாகவதமேளா என்பன தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகின. இவை அனைத்தையும் உள்வாங்கி திரௌபதி அம்மன் கோயில் ஒரு சடங்கு நாடகமாகத் தெருக்கூத்து உருவானது.

திரௌபதி அம்மன் திருவிழாவும் தெருக்கூத்தும்
       திரௌபதி அம்மன் திருவிழா தொண்டை மண்டலத்தில் குறைந்தபட்சம் 20 நாள்களாவது நடைபெறும். 20 நாள்களும் பாரத பிரசங்கியார் பாரத கதையை படிப்பார். இது பாரத விழா என்றும் அழைக்கப்படும். ஊரிலுள்ள சகல சமூக சாதி இன மக்களும் இணைந்து செயல்படுவர். எனினும் திரௌபதி அம்மன் கோயில்களின் உரிமை நிர்வாகம் என்பன பெரும்பான்மை சாதி இன மக்களிடமே இருந்தது அவர்கள் விவசாயிகளாக இருப்பர்.
       10-ஆம் பார சடங்கில் திரௌபதி வில் வளைப்புடன் கூத்து ஆரம்பமாகும். திரௌபதி அர்ஜுனனை திருமணம் செய்தல் சடங்கு முறையில் கோயிலில் நடைபெறும். ஏனைய பகுதிகள் தெருக்கூத்து குழுவால் நடித்து காண்பிக்கப்படும்.
       13-ஆம் நாள் அர்ச்சுனன் தபசு நடக்கும். மேடையில் விடியவிடியக் கூத்து நடந்து காலையில் கோயில் முன்னால் நடப்பட்ட மரத்தின் மீது அர்ச்சுனன் ஏறித்தவம் செய்வார். அர்ச்சுனன் தவம் செய்ய ஏறும் மரத்தை குழந்தை பேறு அற்ற பெண்கள் முழுகிக் குளித்துவிட்டுச் சுற்றி நிற்பர். அர்ச்சுனன் மர உச்சியில் நின்று சிவனை நினைத்துப் பாடி வில்வ இலைகளையும், பழங்களையும் கீழே சிவனை நினைத்து வீசுவார். அவற்றை இப்பெண்கள் பக்தி சிரத்தையுடன் முந்தானையில் தாங்குவர். அருச்சுனன் கீழிறங்கி வந்து சிவனை சந்தித்து மல்யுத்தம் புரிந்து, உண்மை உணர்ந்து பாசுபதாஸ்திரம் பெறும் வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.
       14-ஆம் நாள் கீசக வதமும், 15-ஆம் நாள் வீராடபர்வமும் நடைபெறும். 16-ஆம் நாள் அரவான் களப்பலி நடைபெறும். இதில் அரவான் சிலையொன்று கோயிலுக்கு முன்னார் செய்து வைக்கப்படும். நாடகம் இரவில் மேடையில் முடிந்ததும் காலையில் அரவான் களப்பலி சடங்காகக் கோயில் முன்றலில் நடைபெறும்.
       17-ஆம் நாள் கர்ண மோட்சம் தெருக்கூத்து நடைபெறும் 18-ஆம் நாள் துரியோதனன் வதம் இடம்பெறும். இது “படுகளம்“ என அழைக்கப்படும்ஃ 70-80 நீளமான துரியோதனின் சிலை படுக்கை நிலையில் கோயில் முன்னாள் செய்து வைக்கப்படும். காலையில் பிரசங்கியார் 18-ஆம் போரை வருணிக்க துரியோதனனுக்கும் வீமனுக்கும் கூத்து கலைஞர்கள் கோயில் முன்றலில் வசனம் பேசிப் போர் புரிவர். போரில் துரியோதனன் சிலையின் தொடையில் வீமன் அடிக்க அதில் வரும் ரத்தத்தை அனைவரும் தொட்டு எடுப்பர். (அச்சமயம் திரௌபதி சிலையும் அங்கிருக்கும் திரௌபதி துரியோதனின் இரத்தம் தலை தடவிக் கூந்தல் முடிந்ததை மக்கள் மீளச் செய்வர்)
       19-ஆம் நாள் தீ மிதித்தல் நடைபெறும். கோயில் முன் தீக்குழி பரப்பி திரௌபதி அம்மனின் சிலையுடன் 5 காப்புகாரரும் தீப்பாய்வர். மக்களும் இதில் கலந்து கொள்வர். 20-ம் நாள் தருமர் பட்டாபிஷேகத்துடன் பாரத விழா முடிவடையும்.
       இவ்வகையில் 17-ஆம் நூற்றாண்டில் தெருக்கூத்து ஓர் சடங்கு நாடகமாக ஆக இருந்துள்ளது. இக்கூத்து மேடையிலும், மேடைக்கு வெளியேயும் நடைபெற்றுள்ளது. திரௌபதி வணக்கம் தமிழ்நாட்டில் வந்தமைக்கும் வீரர் வழிபாட்டுக்கும் சம்பந்தமுண்டு. சாளுக்கியரின் படை எடுப்பினின்று தற்காத்துக்கொள்ள வீர மக்களை திரட்ட பல்லவ மன்னர்கள் திரௌபதி வணக்கத்தை தொண்டை மண்டலத்தில் ஏற்படுத்தினர் என்பது ஒரு சாரார் வாதம்.
       தொண்டை மண்டலப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில்களில் இச்சடங்கு முறைகள் பிரதேச வேறுபாடுகளைக் கொண்டுள்ளன என சில ஆராய்ச்சியாளர்கள் கண்ட முடிபாகும். தொண்டை மண்டலத்திலுள்ள செஞ்சியில் இச்சடங்கு முறைகள் ஆரம்பமாகி அதுவே மற்ற இடங்களுக்கும் பரவியிருக்கலாம் என்பது ஒரு சிலர் கருத்தாக இருக்கிறது.
       இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் இந்து மக்கள் அனைவரையும் இணைத்து அவர்கட்கு எதிராக போரிடவைக்கும் இந்து மன்னர்களிடமிருந்தது. ஆரம்பத்தில் திரௌபதி அம்மன் சடங்காக இருந்த தெருக்கூத்து பின்னாளில் சடங்கு நடைபெறாத காலங்களில் ஊர்மன்றங்களில் பொழுது போக்கிற்காக ஆடும் கூத்தாக மாற்றம் பெற்றது.

முடிவுரை
       இந்திய கலை வடிவங்களில் மிகத்தொன்மையானதும் மதிப்புமிக்கதுமான ”தெருக்கூத்து” அருகிக்கொண்டே வருகிறது. நாட்டுப்புற நிகழ்கலைகளின் உன்னத வடிவமாக நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து தமிழகத்துப் பாரம்பரியக் கலைகளில் முதன்மையானது மட்டுமன்றி முக்கியமானதும் கூட. ஆடல், பாடல், உணர்ச்சி பொங்கும் வசனங்களுடன் அமையப்பெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட அடவுகளாலும் காட்சி படிவங்களாலும் உடல் மொழியாக வெளிப்படுத்தப்பட்டு இக்கலை வடிவம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுத் திகழ்ந்த காலகட்டம் முடிவடைந்து விட்டதோ என்ற எண்ணத் தோன்றுகிறது.
       கேரளாவின் ”கதகளி” அவர்கள் எவ்வாறு உலகளாவிய ”தொன்மைகலைச் சான்றாக” முன்னிறுத்தப்படுகின்றதோ அதுபோல் தமிழர்களின் ”தொன்மைகலைச் சான்றாக” ”தெருக்கூத்து” இடம்பெறச் செய்யவேண்டும்.

‘ நன்றி ‘


உதவிய நூல்கள்
1.   மாற்று நாடகங்கள் – பேரா.பார்த்தீபராஜா
2.   மாபாரத கூத்துகள் – கவிஞர் முகிலன்