Sunday, 27 September 2015

பெண்கள் முன்னேற்றம் கட்டுரை


பதிவரின் பெயர்
:
கி.லோகநாதன் M.A.M.A.B.Ed.,M.Phil. Phd.
அகவை
:
46
ஒளிப்படம்
:

வலைப்பதிவு

teacherloga.blogspot.in
மின்னஞ்சல்
:
அலைபேசி எண்
:
9789594178

உறுதிமொழி

1.   படைப்பு தமது சொந்தப்படைப்பு என உறுதி கூறுகிறேன்.
2.   வலைப்பதிவர் திருவிழா 2015 தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015” க்காகவே எழுதப்பட்டது.
3.   இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்னும் உறுதி கூறுகிறேன்.


தங்கள் உண்மையுள்ள,
    கி.லோகநாதன்

இடம் : திமிரி
நாள் : 25.09.2015


           


மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015
பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி
வகை : 3
தலைப்பு : சிறைகளுக்கும் விடுதலை!
முன்னுரை
       பெண்னைப் பற்றி பேசுவதும் எழுவதும் இன்று பரவலாகி வருகின்றது. ஆனால் நடைமுறையில் செயல்பாட்டில் பெரிய இடைவெளி. பெண் விடுதலைப்பற்றி பேசுபவர்களும் எழுதுபவர்களும் கூட சுயவாழ்வில் அதனைக் கடைப்பிடிப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள்,

       பெண்ணைப் பற்றிப் பேசுவதும் எழுவதும் பெண்கள் முன்னேற்றத்திற்கு, பெண் விடுதலைக்கு என்ற நிலையிலே கவனிக்கப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல! பெண்ணைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் ‘சமூக விடுதலைக்கானவை.’ சமூக விடுதலையும் பெண் விடுதலையும் வேறு வேறானவை அல்ல! இதனைத்தான் மகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும் நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறார்கள். வானத்தை ‘ஆகாஷ்வாணி’ என்றும் பூமியை ‘பூமாதேவி’ என்றும் தேசத்தை ‘பாரத மாதா’ என்றும் கரைபுரண்டு ஓடும் நதிகளை ‘கங்கை, யமுனை, காவிரி, கோதாவரி’ என்றும், கல்விக் கடவுளை ‘சரஸ்வதி’ என்றும் செல்வத்திறகு ‘லஷ்மி’ என்றும் எல்லைகளை காக்கும் தெய்வங்களை ‘காளி, சக்தி, முத்தாளம்மன்’ என்று பெண் தெய்வங்களாகவே சித்தரித்துள்ளோம். அனைத்துச் சமூக குழுக்களும் தங்களுடைய குல தெய்வங்களாகப் பெண் தெய்வங்களையே வழிபடுகின்றன. நாம்  பேசுகின்ற மொழியினையே தாய்மொழி என்றுதான் சொல்கிறோம்.
       ஆனால் நடைமுறை வாழ்வில், சமூக யதார்த்தத்தில் பெண்களின் நிலைப்பாடு என்ன?
       இந்த முரண்பாடுகளுக்கு என்ன காரணம்? என்பதை இக்கட்டுரையில் காண்போம்,

வரலாற்று நோக்கில் பெண்கள்:-
       இந்த உலகில் உள்ள உயிர்களை எண்ணிச் சொல்ல முடியாது. அவற்றில் மனிதனும் ஓர் உயிர். மனிதன் என்னும் உயிர் தோன்றிய காலத்தில் அவனுக்கு குடும்பம் இல்லை, மனைவி இல்லை. பேசுவதற்கு மொழிகூட இல்லை. ஒவ்வொரு உயிருக்கும் அவசியமான இரண்டு காரியங்கள் இருந்தன. முதல் காரியம் சாப்பிடுவது; இரண்டாவது இனப்பெருக்கம் செய்தது. மனிதர்கள் கணவன், மனைவி, குழந்தைகள் என்று வாழத்தொடங்கினான். இதனை ‘கூட்டம்‘ அல்லது ‘குழு‘ என்பதுதான். குடும்பம் தோன்றுவதற்கு முன்னதான சமுக அமைப்பு ஆகும். சில குழுக்கள் பெண்களை மையமாகக் கொண்டிருந்தன. இதுதான் ‘குடும்பம்‘ என்ற அமைப்பின் பழமையான வடிவம். தாய்வழிச் சமூகத்தில் பிறக்கும் குழந்தைகளின் அம்மா யார் என்று சொல்லாம். அப்பாவைச் சொல்ல முடியாது. அந்தக்குழுவில் இருக்கும் யாராவது ஒரு ஆண் தந்தையாக இருக்கக்கூடும். பிற்பாடு ‘தனி உடைமை‘ என்ற கருத்தாக்கம் குழுவினரிடையே தோன்றிய பிறகு ஆண்மகனை பிரதானமாகக் கொண்ட சமூக அமைப்புத் தோன்றியது,
      
பெண் வழிச் சமூகம் ஆண் வழிச் சமூகமான கதை:-
Ø  பெண்கள் வேட்டையிலிருந்து விலக்கப்பட்டார்கள். பெண்னுக்கு வெளி உலகத் தொடர்பு அறுத்து போனது. பெண்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே உகந்தவள் என உருவானது.
Ø  பெண் அடிமை ஆவதற்குப் போடப்பட்ட முதல் அடி நீர், நிலம் கால்நடைகள் போன்ற இயற்கை வளங்கள் ஆண்களின் வசமானது. இயற்கை வளங்கள் ஆணின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பெண் இப்போது ஆணுக்கு சொந்தமான பொருள்களில் ஒன்றாகி போனாள் உடைமை ஆகிப் போனாள்.
Ø  ஒருவனுக்கு ஒருத்தி என்ற புதிய குடும்ப முறை உருவானது. இதுதான் ஆண்வழிச் சமூகத்தின் ஆரம்பம்.
காலங்கள் உருண்டன. ஆணை அடிப்படையாகக் கொண்ட ‘தந்தை வழிச் சமூகம்‘ தலை எடுத்தது.
Ø  சமூக உற்பத்தில் பெண் அனுமதிக்கப்படவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தவிர்க்க முடியாத விதி ஆனது. கற்பு நெறிக்கும் சமயம் சாயம் பூசினார்கள், சமயம் கடுமையாக கட்டுப்பாடுகளைப் பெண்களின் மீது திணித்தது. சமயம் என்பது ஆண்களின் கைப்பாவை ஆனது.
Ø  சமயத்தின் பெயரால் ஆண்கள் புதுப்புது விதிமுறைகளை உருவாக்கினர். அவை பெண்களுக்கு எதிராக அமைந்தன. இந்த விதிகளை வலியுறுத்த இலக்கியங்களை உருவாக்கினர்.
Ø  மனைவி கணவனுக்கு கட்டுப்பட்டவள். அவளுக்கு கற்பு உயிரைவிடப் பெரியது. கணவனுக்காக மனைவி தியாகங்கள் செய்ய கடமைப்பட்டவள்.
Ø  கணவனை இழந்த பெண் விதவையாகவே காலம் தள்ள வேண்டும். விதவைகள் மீண்டும் திருமணம் செய்யக்கூடாது.

இலக்கியத்தில் பெண்களின் நிலை:-
       காலத்தின் கண்ணாடி இலக்கியம், ஒரு காலகட்டத்தில் நிகழும் சமூக வாழ்க்கையின் செயல்கள் யாவும் இலக்கியங்களில் பதிவு செய்யப்படுகின்றது. இந்தி மொழி இதிகாசங்களிலும், தழிழ் இலக்கியங்களிலும் ஆண்களின் அடக்குமுறைக்கு ஆளான பெண்கள், ஆண்களால் இழிவுபடுத்தப்பட்ட பெண்கள், இப்படி இப்படிதான் பெண் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு ஆளான பெண்கள் என்று நம் இலக்கியங்கள் பல சான்றுகள் கூறுகின்றன.
       இலக்கியங்களையும் இதிகாசங்களையும் புரட்டும்போது இரண்டு அம்சங்களை நாம் கூர்ந்து கவனிக்கப்படவேண்டும்.
       1. பெண்ணின் அன்றைய நிலை
       2. பெண்ணின் எதிர்ப்புக் குரல்

1. பெண்ணின் அன்றைய நிலை:-
       வாய்மொழி இலக்கியமாகப் பழமொழிகள் கருதப்படுகின்றன. அவற்றில் பெண்ணின் நிலை….
       ‘பெண்பிள்ளை சிரிச்சா போச்சு
       புகையிலை விரிச்சா போச்சு.‘
       ‘இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
       சந்திரன் கெட்டதும் பெண்ணாலே‘.
       ‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே‘
       ‘தையற் சொல் கேளேல்‘
       ‘உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு‘
       ‘கல்லானாலும் கணவன், புல்லாணாலும் புருஷன்‘

இப்பழமொழிகள் சொல்லும் செய்திகள்:
v  பெண் இயற்கையாகவே அறிவற்றவள்
v  பெண்கள் உரிமையில்லை
v  கணவனின் உடைமைப் பொருள்
v  பெண்களுக்கு சொத்து உரிமை இல்லை.

தொல்காப்பியத்தில் பெண்கள்:-
       தமிழகத்தில் எழுத்து வடிவில் கிடைத்துள்ள தொன்மையான நூல் தொல்காப்பியம். ஆண்களைப் பற்றி குறிப்பிடும் போது பெருமையும் உள்ள உறுதியும் ஆடவனுக்கு சொந்தம் என்கிறது. பெண் என்று வரும்போது அச்சம். நாணம், மடம், பயிர்ப்பு என்ற நான்கு குணத்தினை கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறது.
       பொருள் தேடுபவன் ஆண், வீட்டு வேலைகளைச் செய்பவள் பெண். ஆண்கள் கடல் கடந்து பொருள் தேடச் செல்லலாம். அப்போது பெண்களை அழைத்துச் செல்லக்கூடாது,
       ‘முந்நீர் வழக்கம் மகடுவோ இல்லை‘ (தொல், பொருள்)
தொல்காப்பியம் பல்வேறு பிரிவுகளுள் ஒன்றாக பரத்தையற் பிரிவு, ‘காதற் பரத்தை‘, இற்பரத்தை, சேரிப்பரத்தை, காமக்கிழத்தி போன்ற பல்வேறு பெயர்களில் சென்று திரும்பும் கணவனைக் கண்டிக்கவோ திருத்தவோ பெண்களுக்கு உரிமை இல்லை.


சங்க இலக்கியத்தில் பெண்கள்:-
ª  சங்ககாலத்து இலக்கியங்கள் பெண்களைப் பலவீனமானவர்களாகவே காட்டுகின்றன.
ª  பெண் பெரும்பாலும் அவளுடைய உறுப்பு அழகையும், அவள் அணியும் ஆடை, அணிகலனையும் கொண்டே அழைக்கப்பட்டாள்.
ª  பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை, தொழில் செய்யும் உரிமை, தன் வாழ்க்கைத் துணையை தேடிக்கொள்ளும் உரிமை ஆகியன இருந்தன என்பதைனை அறியமுடியாது.
ª  பெண்கள் தங்கள் கணவரைத் தாமே தேர்ந்தெடுக்கும் நிலை பெற்றோர்களின் முயற்சியால் கணவரைத் தேர்ந்தெடுக்கும் நிலை இருந்துள்ளன.
ª  உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கம் வசதிபடைத்த குடியினரிடையே நிலவி உள்ளது.

அற இலக்கியங்களில் பெண்கள்:-
       சங்க காலத்தை ஒட்டி எழுந்த நூல் திருக்குறள். திருக்குறளை அறம் கூறும் நூல் என்பர். இந்நூல் பெண்ணைப் பற்றி..
·         பெண்னை ‘வாழ்க்கைத்துணை‘ என்று உயர்வாக கருதுகிறது.
·         பெண்ணுக்கு கற்பு இன்றியமையாதது.
·         கணவனைச் சார்ந்து வாழும் பெண் அவனை தெய்வமாகக் கருதி வணங்கவேண்டும்.
·         ஆண்கள் பிறருடைய மனைவியை நாடக் கூடாது.
·         திருவள்ளுவர் காலத்தில் பெண்கள் அரசியலிலோ பொது வாழ்விலோ பங்கு கொண்டதாக தெரியவில்லை.

காவிய, காப்பிய நோக்கில் பெண்கள்:-
       தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் வெளிவந்த காலத்திலும் பெண்களின் நிலை வருந்தும்படியாகவே இருந்தது.
v  இராமாயணத்தில் தசரதனுடைய அந்தப்புரத்தில் அறுபதினாயிரம் பெண்கள் இருந்தனர். இதில் அரசியல் ஒப்புதல் பெற்றவர் மூவர்.
v  இராவணனோ மனைவியர் எண்ணிக்கையில் தசரதனையும் விஞ்சியவன்.
v  அசோகவனத்தை சுட்டெரிக்கும் ஆற்றல் பெற்றவளாக சீதை இருந்தாலும் இராமனுக்கு மனைவி என்ற நிலையில் அடங்கி இருப்பதே சீதைக்கு அழகு என்று காட்டுகிறது இராமாயணம்.
v  பாரதம் பெண்ணடிமைத்தனத்தை மிகுந்து காட்டுகிறது. கணவன் நினைத்தால் மனைவியை சூதாட்டத்தில் பணயம் வைக்கலாம் என்ற கருத்து நிலவியது.
v  சீவகசிந்தாமணி எட்டுபெண்களை மணந்த சீவக மன்னனின் வெற்றிச் சிறப்பைக் காட்டுகிறது.
v  பெரிய புராணத்தில் மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார் அவர்களை அருள் திறமும் கல்வியாற்றலும் கொண்டவராக காட்டப்படுகிறது.

பெண்களின் எதிர்ப்புக் குரல்:-
       ஆண் ஆதிக்கச் சமூகத்தின் போக்கினை எதிர்த்து எழுந்த முதலாவது பெண் சிலப்பதிகாரத்துக் ‘கண்ணகி‘யுடையதுதான். இக்காப்பியத்தில் மேலும்
·         கணிகையர் குல வாழ்வில் இருந்து விலகித் துறவு பூணும் மாதவி
·         வாழ்வின் போலித்தன்மையும், நிலையைமையும் கண்டு துறவியாகவே திரியும் ‘கவுந்தடியடிகள்‘,
‘உணர்வும் அறிவும் கொண்ட சமூக உயிர்தான் பெண் என்பவள்‘ என்ற தமிழ் இலக்கியத்தில் முதன் முறையாக வெளிப்படுத்திய காப்பியம் சிலப்பதிகாரம்தான்.
       வெள்ளிவீதியார், நக்கண்ணையார், ஔவையார் என்ற பெண் கவிஞர்களை புறநானூறு காட்டுகிறது. குறிப்பாக ஔவையார் கவிஞராக மட்டும் நின்று விடாமல் இரண்டு அரசர்கள் பகைகொண்டு ஒருவரோடு ஒருவர் மோதி மக்கள் அழியாதவாறு ‘சமாதானத்தூதுவராக‘ சென்று வெற்றி பெற்று காட்டியிருக்கிறார்.

20ஆம் நூற்றாண்டு இலக்கியங்களில். . .
       20ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள் பெண்ணைப் புதிய பார்வையில் நோக்குவதைக் காண முடிகிறது. ஆங்கிலேயர்கள் வருகை. ஆங்கிலக்கல்வி, வெளித் தொடர்புகள், புதிய சிந்தனைகளின் எழுச்சி காரணமாக புதிய மனப்போக்கு தோன்றியது.
       இந்தக்காலத்தில் பெண்களின் விடுதலைக்காக, எழுத்தில் செயலில் குரல் கொடுத்தவர்களுள் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பாரதியார், திரு.வி.க., பெரியார், பாரதிதாசன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மாயூரம் வேதநாயகம்பிள்ளை பெண் கல்வி, பெண்மதிமாலை, பெண்மானம் ஆகிய நூல்களை படைத்தவர். பாரதியார் பெண்விடுதலை, பெண்விடுதலைக்கும்பி, பெண்மை, சுயசரிதை போன்ற கவிதைகளில் பெண்ணுரிமைக் குரல் கொடுத்தவர்.
       “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
              பேணி வளர்த்திடும் ஈசன். . .
       பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
              பேதமையற்றிடுங் காணீர்?                    - பாரதி

       பெண்கட்கு கல்வி வேண்டும்
       குடித்தனம் பேணுதற்கே!
       பெண்கட்கு கல்வி வேண்டும்
       மக்களைப் பேணுதற்கே!
       பெண்கட்கு கல்வி வேண்டும்
       கல்வியைப் பேணுதற்கே!       - பாரதிதாசன்

       தந்தை பெரியார் 1931ல் விருதுநகரில் நடந்த மாநாட்டில் பெண்கள் விடுதலைக்கான வழிவகைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி கருத்து பிரச்சாரங்கள் செய்தார். பெண்கள் காவல் துறையிலும் படையிலும் பணிபுரிய வாய்ப்பு அளிக்கவேண்டும். அரசு அலுவல்களில் 50% பெண்களுக்கென ஒதுக்கப்பட வேண்டும் என்பன போனற் புரட்சிகரமான கொள்கைகளை வெளியிட்டார். பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலில் பெண்களின் விடுதலைக்கு பல்வேறு கருத்துக்களை புரட்சிகரமாக எடுத்துரைக்கிறார்.

முடிவுரை:-
       வேட்டைச் சமூதாயத்தில் தலைமையிடம் பெற்றிருந்த பெண், விவசாய சமூதாயத்தில் வீழ்ந்து இடைக்காலத்தில் அடிமையாகப்பட்டு பின் 20 ஆம் நூற்றாண்டில் உரிமைக்காகப் போராட எதிர்ப்புக் குரல்கள் பலமாக உதிக்கத் தொடங்கின. “யானைகளையே பிச்சை எடுக்கச் செய்யும் நாடு இது! தம் ஆற்றலை உணர்ந்தால் அவை ஒரு சிறு வாழைப்பழத்துக்காகத் தும்பிக்கையை ஏந்துமா?
       பெண்கள் யானைகள் பலசாலிகள். அவர்கள் தங்களை புரிந்துகொண்டால்…. இந்த அவலம் ஒழியும்“ என்றார் எழுத்தாளர் ஒருவர். பெண்கள் தங்களை புரிந்து கொள்ளவேண்டும். பெண்கள் எந்தவிதத்திலும் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர் என்பதனை ஆண்கள் உணரவேண்டும். பெண்ணும் சேர்ந்ததுதான் சமூகம். இதுதான் இயற்கை அமைப்பு. பெண் விடுதலை என்பதும் பெண் சுதந்திரம் என்பதும் ஆண்களுக்கு எதிரானது அல்ல. சமூகத்தினை மீறின செயலும் இல்லை. உண்மையிலேயே பெண் விடுதலை என்பது சமூகத்தின் விடுதலையே! பெண் சுதந்திரம் என்பது சமூகத்தின் சுதந்திரமே! இந்த அடிப்படையை புரியாதவர்கள் குழம்பிப் போகிறார்கள் மற்றவர்களையும் குழப்புகிறார்கள். பெண்ணியம் என்பது ஆண்களை எதிர்ப்பது அன்று, பெண் விடுதலை பெண்ணியத்தின் நோக்கம் காலம் காலமாக அடிமைப்பட்டு வதைப்பட்டு வாழும் பெண்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டெடுப்பதுததான்“
       இதனை பெண் “கல்வி“ மூலம்தான் மீட்டெடுக்க முடியும். அப்போதுதான் அடிமைப்பட்டு கிடக்கும் பெண் எனும் ‘சிறைகளுக்கும் விடுதலை‘ என்பது சாத்தியமாகும்!


‘ நன்றி ‘

6 comments:

 1. நல்ல விரிவான கட்டுரை வாழ்த்துகள் வெற்றி பெற..

  ReplyDelete
 2. மரியாதைக்குரிய ஐயா,
  வணக்கம். தங்களது படைப்பு சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
  என அன்புடன்,
  C.பரமேஸ்வரன்,
  http://konguthendral.blogspot.com
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம்-638402

  ReplyDelete
 3. மிகச் சிறப்பாக உள்ளது. கருத்து செறிவுள்ள வரிகள் நிறைய உள்ளன

  ReplyDelete